Sunday, April 03, 2011

வானொலி பதில்


 ச்சைபோ கே.கே. 939பி மாடல் எண் கொண்ட வானொலிப் பெட்டி குறித்து சிறிது விளக்கம் தரவும்? – என். பழனிசாமி, கோவை -28 (ADXC 2172).

சைனாவில் இருந்து சமீப காலமாக ஏராளமான தொழில்நுட்பக்கருவிகள் இறக்குமதியான வண்ணம் உள்ளன. அவற்றில் வானொலிப் பெட்டிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சீன வானொலிப்பெட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. விலையும் மிகக்குறைவாக உள்ளது. ஆனால் எண்ணிலடங்கா மாடல்கள் கிடைத்தாலும் அவை சிற்றலை நேயர்களின் தேவையினை பூர்த்தி செய்யவில்லை.
கிடைக்கின்றவற்றில் எது நல்ல தரத்துடன் அனைத்து வசதிகளுடன் உள்ளது என்று பார்க்கும் பொழுது இந்த ச்சைபோ கே.கே. 939பி மாடல் எண் கொண்ட வானொலிப் பெட்டி ஓரளவுக்கு நேயர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது எனலாம். விலையும் அனைவரும் வாங்கும் விதத்தில் உள்ளது. இதில் 13 மீட்டர் முதல் 60 மீட்டர் வரையான அலைவரிசைகளில் ஒலிபரப்பும் வானொலிகளைக் கேட்கலாம். மேலும் கையடக்கமானதாக உள்ளதால் நம் பயணத்தின் போது எளிதாக எடுத்துச்செல்லக்கூடியதாக உள்ளது. டிஸ்பிளேவில் லைட் உள்ளதால் இரவு நேரங்களிலும் வானொலிகளைத் தேடிப்பிடிக்க உதவியாக உள்ளது.
உணர்திறனும் அதிகமாக உள்ளதால் அனைத்து வானொலிகளையும் எளிதாக பிடிக்கமுடிகிறது. தமிழகதின் அனைத்து பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது போன்று தற்பொழுது கிடைப்பதில்லை. ஆனாலும் தேடிப்பிடிக்கலாம். விலை ரூ. 250 முதல் ரூ. 350ற்குள் இந்த ச்சைபோ கே.கே. 939பி மாடல் வானொலிப் பெட்டியை வாங்கலாம்.